விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க முதல்வர் பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ரூபாய் 380 கோடி மதிப்பில் 22 ஏக்கரில் புதிய மருத்துவக் கல்லூரி 18 மாதங்களில் அமைக்கப்பட உள்ளது. இந்த கல்லூரில் 2021- 2022 ஆம் கல்வியாண்டில் 150 மருத்துவ இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. சீவலப்பேரி குடிநீர் திட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் தாமிரபரணி குடிநீர் திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டினார்.
இது குறித்து சீமான் கருத்து தெரிவித்து இருந்தார். அதில், தமிழகத்தில் தொடங்கப்படும் புதிய மருத்துவ கல்லூரிகளால், வடமாநில மாணவர்களுக்கு தான் பயன்; வடமாநில மருத்துவ மாணவர்களால், தமிழகத்தில் மொழி குழப்பம் ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்படும் நிலை உருவாகும்!" என்று தெரிவித்து இருந்தார். இதற்கு பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், உண்மையில் ரொம்ப முத்திப் போச்சு என்று சீமானை குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். எச்.ராஜாவின் இந்த கருத்துக்கு நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.