2014, டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் வகையில் மத்திய அரசு புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவந்தது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தான் மக்களை தவறாக வழிநடத்துகிறது என பாஜக சார்பில் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த நிலையில், காரைக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசும் போது, தான் ஊழல் செய்ததை மறைக்கவும் கலவரத்தை மக்களிடம் தூண்டி விடவும் ப.சிதம்பரம் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேசி வருகிறார். 106 நாட்கள் திகார் சிறையில் இருந்ததால் அவருக்கு மூளை குழம்பி விட்டது என்று நினைக்கிறேன்.நான் இந்தியன் இல்லை என்று கூறுபவர்கள் இந்திய நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று ஆவேசமாக பேசினார்.
திமுக, காங்கிரஸ் கூட்டணி இயற்கைக்கு மாறான கூட்டணி அமைத்துள்ளார்கள். அதனால் அவர்களாகவே வீழ்வார்கள். தமிழகத்தை மையமாக கொண்டு இயங்கும் பயங்கரவாதிகளை தமிழக அரசு மிகத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலின் பயங்கரவாதிகளுக்கு துணை போகிறாரா? அல்லது அமைதியாக இருந்து அனுமதிக்கிறாரா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது என்றும் கூறினார்.