சென்னையில், ‘உள்ளாட்சியில் தன்னாட்சி’ என்கிற தலைப்பில் காணொளி வாயிலாக மக்கள் நீதி மய்யம் நடத்திய கருத்தரங்கில் கட்சியின் முன்னணியினர், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு பேசினர். இதில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் பேசினார்.
இதில் பேசிய கமல், “தமிழகத் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலைச் சிறப்பாக நடத்த இப்போதே பணிகளைத் தொடங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வைக்கிறேன். கட்சியினர் நம்மால் முயன்ற வார்டுகளில் கவனத்தை இப்போதே செலுத்த ஆரம்பிக்க வேண்டும். வசதியானவர்கள் ஏழை மக்களுக்குக் கிடைக்காத வசதியை எட்டிப் பார்த்துவிட்டு அரசு எதுவுமே செய்யவில்லை என்கிற எண்ணத்துடன் கடந்து செல்கிறார்கள்.
அவர்கள் பர்ஸ்களில் இருந்து விழும் சில்லறைகள் அந்த ஏழை மக்களின் துயரத்தைத் தீர்க்கும். பத்திரிகைகளில் எழுதிவிட்டு எல்லாம் சரியாகிவிடும் என்கிற எண்ணத்துடன் திருப்தியடையும் மனநிலையில்தான் உள்ளனர். நாம் இறங்கிச் செயலாற்ற வேண்டும். இங்கு வந்த கருத்தில் முக்கியமானது 'ஸ்லம் சபா' என்பதில் கவனம் செலுத்துவோம்.
மக்கள் தங்களுக்கு உரிமை இருக்கிறது என்பது மட்டுமல்ல கடமை இருக்கிறது என்பதையும் உணரவேண்டும். 100 நாள் வேலை திட்டம், டாஸ்மாக் அனைத்தும் கண் துடைப்பு வேலைகள். மக்களை இன்னும் சோம்பேறியாக்குவதற்கு 100 நாள் வேலை திட்டம் உள்ளது. அதில் கிடைக்கும் காசை செலவு செய்ய டாஸ்மாக் உள்ளது. இப்படி மாறிமாறி வளர்த்துக் கொண்டிருந்தால் அவர்களுக்குப் பொறுப்பு இருக்காது.
மக்களை, அவர்கள் தமிழகத்தின் மனநிலையை 12 ஆண்டுகள் குறைத்துள்ளார்கள். எல்லாவற்றையும் அப்பா, அம்மா பார்த்துக் கொள்வார்கள். நாம் குடித்துக் கொண்டிருந்தால் போதும் என்கிற ஊதாரித்தனத்தை வளர்த்துள்ளார்கள். அப்படிச் செய்யக்கூடாது. அவர்களைப் பெற்றோர்களாக மாற்ற வேண்டும். நாளைய சந்ததியின் பெற்றோர்கள் 18 வயதுப் பையனும்தான். அவரை வார்டு சபைத் தலைவராக மாற்றிக்காட்ட வேண்டும்.
வயதும், அனுபவமும் எஞ்சியிருக்கிற காலமும் குறைவுதான் என்கிற பயம் வரும்போதுதான் பொறுப்பு வரவேண்டும் என்பதல்ல. அது வருவதற்கு முன்னரே அவர்களைத் தயார்ப்படுத்த வேண்டும் என்பதுதான்” என்று தெரிவித்தார்.