நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவில் அமைச்சர் வேட்பாளராக சேவூர்.ராமச்சந்திரன் நிறுத்தப்பட்டார். திமுகவில் ஒ.செ அன்பழகன் நிறுத்தப்பட்டார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இந்நிலையில் அமைச்சர் தனது நண்பர் ஒருவருடன் பேசிய ஆடியோ சமூக வளைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இது ஆரணி தொகுதி அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆடியோவில் அமைச்சரின் வலது கரம், இடதுகரமாக இருந்த ஒ.செ திருமல், சங்கர், கஜேந்திரன், அம்மா பேரவை ஒ.செ பாரி.பாபு ஆகிய நான்கு பிரமுகர்களும் அமைச்சர் பெயரை சொல்லி கட்சியினரை ஏமாற்றினார்கள். இவர்கள் அடிமட்ட கட்சி தொண்டர்களை ஏமாற்றியுள்ளார்கள். பல கிராமங்களில் கட்சி நிர்வாகிகள் திமுகவிடம் விலைப்போய் உங்களை ஏமாற்றியுள்ளார்கள்.
பாமகவினர் வேலை செய்த அளவுக்கு கூட சொந்தக்கட்சியினர் வேலை செய்யவில்லை என்று அமைச்சரும், அந்த நபரும் பேசிக்கொண்டுள்ளனர். அதேபோல் வெற்றி பெற்றவுடன் பாமக நிர்வாகி வேலாயுதத்தை ஒதுக்கிவிடுங்கள் கூட வைத்துக்கொள்ளாதீர்கள் எனச்சொல்வதும் அதை அமைச்சர் ‘உம்’ எனச்சொல்லி கேட்டுக்கொள்கிறார்.
கட்சியினரை நம்பாமல் மாற்றுவழியில் ஒட்டுக்கு பணம் தந்ததை கட்சியினர் விரும்பவில்லை, நீங்கள் தந்த பணம் முழுமையாக போய் சேர்ந்துவிட்டது எனச்சொல்ல அதனால் தான் அப்படி திட்டமிட்டது என்கிறார் அமைச்சர்.
நான் வெற்றி பெற்றவுடன் அந்த 4 பேரை (கட்சியினரை) ஒதுக்கிடுறேன். ஒரு அறிக்கையும் விடுறேன், என் பெயரை பயன்படுத்தி யாராவது பணம் வசூல் செய்தால் தராதீர்கள் என அறிக்கை விட்டுவிடுகிறேன் எனப்பேசுவது கட்சியினரை அதிருப்தியடைய செய்துள்ளது.