காஞ்சிபுரம் அருகே 7 மாத குழந்தை தைல டப்பாவை விழுங்கிய நிலையில் அரசு மருத்துவர்கள் போராடிய குழந்தையை காப்பாற்றி உள்ள சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ளது ஆளவந்தார் மேடு கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வந்த அஜித்-டயானா என்ற தம்பதிக்கு 7 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கீழே கிடந்த நாணய அளவிலான தைல டப்பாவை வாயில் போட்டு விழுங்கியுள்ளது. பின்னர் டப்பாவை வெளியே துப்ப முடியாமல் சிரமப்பட்டுள்ளது. இதற்கிடையில் தொண்டை பகுதியில் தைல டப்பா சிக்கிக்கொண்டது.
குழந்தை அழுவதை கண்ட பெற்றோர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளனர். குழந்தையின் வாயிலிருந்து தைல டப்பாவை எடுக்கப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இதனால் குழந்தையின் வாயிலிருந்து ரத்தம் கொட்டத் தொடங்கியது. உடனடியாக குழந்தை காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து தொண்டைக் குழியில் சிக்கிய தைல டப்பாவை வெளியே கொண்டு வர முயற்சி செய்தனர்.
குழந்தையின் உயிருக்கு ஆபத்து நேரும் அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டிருந்ததால் தொடர் முயற்சியில் ஈடுபட்ட மருத்துவர்கள் குரல்வளை காட்டி என்ற முறைப்படி நுணுக்கமாக செயல்பட்டு தைல டப்பாவை வெளியே எடுத்து குழந்தையை காப்பாற்றினர். தொடர்ந்து குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். குழந்தையின் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.