விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள மீனவர் பகுதியான எக்கியர்குப்பம் அருகே இருக்கும் வம்பாமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் குடித்து 14 பேரும், செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேரும் என தமிழ்நாட்டில் 22 உயிரிழந்துள்ளனர். இது தமிழ்நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கள்ளச்சாராயத்திற்கான மூலப்பொருட்களை விற்றவர் உள்ளிட்ட மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில், கள்ளச்சாராய மரணங்கள் மற்றும் சட்ட ஒழுங்கு சீர்குலைவு ஆகியவை தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 22ம் தேதி சின்னமலை பகுதியிலிருந்து ஆளுநர் மாளிகை வரை பேரணியாகச் சென்று ஆளுநரிடம் புகார் மனு அளிக்கவுள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை 21ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜகவினர் சந்திக்க இருக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: “கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து புகார் மனு அளிக்கவுள்ளோம். வரும் 21ம் தேதி ஆளுநரைச் சந்தித்து பாஜக குழு அந்தப் புகார் மனுவை அளிக்கும். ஆளுநர் நேரடியாகத் தலையிட்டு மது தொடர்பான பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அந்த மனுவில் செந்தில்பாலாஜியை பதவியிலிருந்து நீக்க முதல்வருக்கு ஆளுநர் உத்தரவிடக் கோரியும் வலியுறுத்தவுள்ளோம்.”
ஏற்கனவே கள்ளச்சாராயம் அருந்தி ஏற்பட்ட உயிரிழப்புகள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் அரசிடம் அறிக்கை கேட்டுள்ளார். அதேபோல், அதிமுக வரும் 22ம் தேதி ஆளுநரைச் சந்தித்து புகார் மனு கொடுக்க இருக்கும் நிலையில், பாஜக 21ம் தேதி சந்தித்து புகார் மனு கொடுக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.