தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அன்று பதிவாகும் வாக்குகள் மே மாதம் 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கிறது. இதனால், அரசியல் கட்சிகள் தங்கள் தொகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். சில இடங்களில் வேட்பாளர்கள், துணி துவைப்பது, டீ போடுவது என வாக்காளர்களை அதிரவைத்து வருகின்றனர். சில இடங்களில், 'இதுவரை எதற்கும் வரவில்லை இப்போது எதற்கு வருகிறீர்கள்?' என்று வேட்பாளர்களை அதிரவைக்கின்றனர் வாக்காளர்கள்.
காரைக்குடி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக போட்டியிடுகிறது. இத்தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளராக எச்.ராஜா களமிறங்குகிறார். இவர் அத்தொகுதியின் வேட்பாளராக அறிவித்ததிலிருந்து அத்தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.
இந்நிலையில், இன்று காரைக்குடி தொகுதிக்குட்பட்ட பனம்பட்டி எனும் கிராமத்தில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த எச்.ராஜா, அங்கிருந்த ஒரு சிறுவனிடம், “என்ன படிக்கிறாய்” என்று கேட்டார். அதற்கு அச்சிறுவன், “நான் 7ஆம் வகுப்பு படிக்கிறேன்” என்று தெரிவித்தார். மேலும் எச்.ராஜா, “சூப்பர், நமது நாட்டின் பிரதமர் பெயர் என்ன” என்று கேட்டார். அதற்கு அச்சிறுவன், “அவர் யார் என்றே தெரியாதே” என்றார். இதில் அதிர்ச்சியடைந்த எச்.ராஜா, தனது கையில் இருந்த பாஜக துண்டுப் பிரசுரத்தில் இருக்கும் மோடியின் புகைப்படத்தைக் காட்டினார். அப்போது அச்சிறுவன், “ஓ, இவர நல்லா தெரியுமே” என்றார். இவர் தான் பிரதமர் மோடி” என்றார். மேலும், அப்பிரசுரத்தில் இருந்த தன்னுடைய புகைப்படத்தைக் காட்டி, “இது யார்?” என்று கேட்டார். அச்சிறுவன் என்ன சொல்வது என யோசித்துக் கொண்டிருந்தபோது, தனது முகக் கவசத்தைக் கழட்டினார் எச்.ராஜா. அவரை பார்த்ததும் அச்சிறுவன், “நீங்கதான இது” என்று கேட்டார். இதனையடுத்து எச்.ராஜா, “ஆமா, நான் தான்..” என்று சொல்லி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.