சில வாரங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். அதன்படி திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்த அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரனை அந்தப் பதவியில் இருந்து எடுத்துவிட்டு முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அந்தப் பதவியில் நியமித்துள்ளார்கள் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர்கள்.
தமிழகம் முழுவதும் கழக வளர்ச்சிக்காக மாவட்டங்கள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என வாய்ப்புக்கு தகுந்தார்போல் பிரிக்கப்பட்டு புதிய புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டங்கள் மட்டும்மல்லாமல் ஒன்றியங்களையும் பிரிக்க மாவட்டச் செயலாளர்களிடம் பட்டியல் கேட்டுள்ளது. அதன்படி தண்டராம்பட்டு ஒன்றியம் கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரிக்கப்படவுள்ளது. தற்போது தண்டராம்பட்டு ஒன்றியச் செயலாளராக உள்ள ராஜாவை, கிழக்கு ஒன்றியச் செயலாளராக மாற்றிவிட்டு, மேற்கு ஒன்றியத்தின் செயலாளராக ஜானகிராமன் என்பவரை நியமனம் செய்ய, மாவட்டச் செயலாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி முடிவு செய்துள்ளார்.
இதனை அறிந்து தண்டராம்பட்டு மேற்கு பகுதியைச் சேர்ந்த கட்சியினர் எதிர்ப்பு குரல் எழுப்பிவருகின்றனர். இதுப்பற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.க.வினர், இதற்கு முன்பு ஒன்றியச் செயலாளராக ஜானகிராமன் இருந்தார். 2011– 2016 வரை தண்டராம்பட்டு ஒன்றியக் குழு தலைவராக இருந்தார். இந்த ஒன்றியக் குழு தலைவர் பதவிக்கு வர தி.மு.க.வுடன் கூட்டு வைத்துக் கொண்டார். தனி மெஜாரிட்டியில் தி.மு.க. வெற்றி பெற்று சேர்மன் பதவியில் உட்காரும் நிலையில் இருந்தது. ஆனால் தி.மு.க.வின் மாவட்ட மேலிடத்தில் பேசி தி.மு.க. கவுன்சிலர்களை அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப்போட வைத்து சேர்மன் பதவியில் அமர்ந்தார். துணை சேர்மன் பதவியில் தி.மு.க.வை சேர்ந்தவர் வெற்றி பெற்றார். சேர்மன் பதவியைத் தனக்கு விட்டுத் தந்ததற்காக ஜானகிராமன் தி.மு.க.வுக்கு விசுவாசமாகவே இருந்தார். இதனை அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா பார்வைக்கு கொண்டுசெல்ல அப்போது, ஒன்றியச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.
அவர் மறைவுக்குப் பின்பு, ஜெயலலிதாவால் ஓரம்கட்டப்பட்ட பலருக்கு ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளைத் தந்துவருகிறார்கள். அப்படித் தான் தரவேண்டியவர்களுக்கு லம்பாக தந்து மீண்டும் ஒன்றியச் செயலாளராக ஜானகிராமன் முயற்சி செய்கிறார். ஜானகிராமன், மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்தவராக இருந்தால் கூட பரவாயில்லை. அவர் இருப்பது தண்டராம்பட்டில். ஆனால் தானிப்பாடி, மேல்மலமஞ்சனூர், மோத்தக்கல், போந்தை எனத் தெற்கு பகுதிக்கே சம்மந்தமில்லாத நபரைக் கொண்டு வந்து மேற்கு ஒன்றியச் செயலாளர் எனச் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது எனக் கேள்வி எழுப்புகின்றனர்.
இதுதொடர்பாக மாவட்டச் செயலாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியிடம் முறையிட்டால் திட்டுகிறார். இதுபற்றி ஒருங்கிணைப்பாளர்களான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் முதல்வர் பழனிசாமிக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறோம், எங்களுக்கு அதுபற்றி நியாயம் கிடைக்கவில்லையென்றால் நாங்கள் வேறுமாதிரியான முடிவுகளை எடுப்போம் என்கிற முடிவில் இருப்பதாகக் கூறுகிறார்கள்.