Skip to main content

அந்த ‘சார்’ இருக்கிறாரா? இல்லையா? - கனிமொழி எம்.பி பதில்

Published on 04/01/2025 | Edited on 04/01/2025
Kanimozhi MP replied on Anna university issue

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அந்த எப்.ஐ.ஆரில் ஞானசேகரன் யாரோ ஒருவரை ‘சார்’ எனக் குறிப்பிட்டு பேசியதாகக் கூறப்பட்டது. அந்த சார் யார்? என அதிமுக உள்பட எதிர்க்கட்சிகள் இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றன. 

இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரித்து, 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட்டது. விசாரணையில் தொடர்ந்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது. முன்னதாக ஞானசேகரன் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதும், அதை வைத்து பண்ணை வீட்டை வாங்கி அதில் வசித்து வந்ததோடு, இதேபோல் பல்வேறு பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 

இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் குறிப்பிடும் அந்த சார்? இருக்கிறாரா? இல்லையா? விசாரணையில் தான் தெரியவரும் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுத்த பிறகும், எதிர்க்கட்சிகள் அதை கையில் எடுத்துக்கொண்டு அரசியலாக்க பார்க்கிறது. எப்.ஐ.ஆர் கசிந்ததைக் கூட கொஞ்ச நாள்களாக பா.ஜ.க பேசிக் கொண்டிருந்தார்கள். அதன் பிறகு அது இல்லாமல் போனது. அந்த தலைவர்களே, தங்களது எக்ஸ் பக்கத்தில் எப்.ஐ.ஆரை வெளியிட்டார்கள். அது மிக தவறான ஒன்றாகும். ஆனால், அதற்கு காரணம் தமிழ்நாடு அரசு இல்லை” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்