தமிழ்நாட்டில் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட பிறகு திடீரென தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று திரும்பினார். டெல்லியில் இருந்து திரும்பிய அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக இன்று (6ம் தேதி) துவங்க இருந்த அண்ணாமலையின், மூன்றாம் கட்ட நடைப்பயணம் தள்ளி வைக்கப்பட்டது. அதேசமயம், நேற்று (5ம் தேதி) தமிழ்நாடு பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் அண்ணாமலை தலைமையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டு, அந்தக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தமிழ்நாடு பாஜ.க. தலைவர் அண்ணாமலை தாமதமாக வந்தார் எனும் விமர்சனங்களும் இருந்து வருகிறது. இந்நிலையில், கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, நிர்வாகிகளை வரவேற்று பா.ஜ.க. பூத் கமிட்டிகள், மற்றும் தேர்தல் வேலைகள் குறித்து நிர்வாகிகளிடம் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் அண்ணாமலை, பிரதமர் மோடி தன்னை இரு முறை போனில் அழைத்து பேசினார் என்று தெரிவித்ததாக பா.ஜ.க.வினர் தெரிவித்தனர். கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாக பா.ஜ.க.வினர் தெரிவித்ததாவது; டெல்லி சென்று திரும்பிய எனக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனை அறிந்து பிரதமர் மோடி, இன்று காலை என்னை போன் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது அவர் என் உடல் நிலை குறித்துக் கேட்டார், எனக்கு தொண்டை வலி எனத் தெரிவித்தேன். அதற்கு அவர், நீங்கள் டெல்லி வந்து என் நேரடி பார்வையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுங்கள். உங்கள் உடல் நிலை எனக்கு முக்கியம் என்றார்.
நான், ஆயுர்வேத சிகிச்சை பெறுவதாக அவரிடம் தெரிவித்தேன். சரி என அவர் போன் வைத்துவிட்டார். பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் என்னை போனில் அழைத்த பிரதமர் மோடி, ஆயுர்வேத சிகிச்சை டெல்லிக்கு வந்து பெற்றுக்கொள்ளுங்கள் நான் ஏற்பாடு செய்கிறேன் என்றார். நான், வேண்டாம் இங்கையே பார்த்துக்கொள்ளலாம் என்று தெரிவித்து அவருக்கு நன்றி தெரிவித்தேன். அப்போது அவர், உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும் அதுமிகவும் முக்கியம் என்று தெரிவித்து போனை கட் செய்தார்.
பிரதமர் மோடி, பரபரப்பான தனது நிகழ்ச்சி நிரல்களுக்கு இடையில் ஒரு தொண்டர் மீது அக்கறை காட்டுவதை எடுத்துச் சொல்லவே இதனை நான் இங்கு தெரிவிக்கிறேன் என்று பேசியதாக பா.ஜ.க. வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.