Skip to main content

“அவரிடம் ஏதோ ஒரு செயல் திட்டம் இருக்கிறது...” - தொல். திருமாவளவன் எம்.பி. பேட்டி!

Published on 15/12/2024 | Edited on 15/12/2024
He has some kind of plan of action Thol Thirumavalavan MP Interview

விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனம் சார்பில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த 6ஆம் தேதி (06.12.2024) சென்னையில் உள்ள நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. த.வெ.க. தலைவர் விஜய் இந்நூலை வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும். எனவே மன்னராட்சியை ஒழிக்க வேண்டிய நேரம் இது” எனப் பேசியிருந்தார். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து வி.சி.க.வில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக அக்கட்சியின் நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் வெளியிட்டிருந்த அறிவிப்பில், ‘வி.சி.க. துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது  தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது. இது குறித்து கடந்த 07-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தலைவர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது. கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும்; அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும்; அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.

இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு தவறான முன்மாதிரியாக அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது. இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், ஆதவ் அர்ஜூனா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஆதவ் அர்ஜூனா கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து தனியார் தொலைக்காட்சிக்கு ஆதவ் அர்ஜூனா அளித்த பேட்டியில் திமுகவைச் சேர்ந்த அமைச்சர் எ.வ. வேலு, தொல். திருமாவளவனைப் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கக் கூடாது என்று அழுத்தம் கொடுத்ததாகத் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இது தொடர்பாகச் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், “என்னை யாரும் இணங்க வைக்க முடியாது. இந்த கருத்தில் நான் உறுதியாக உள்ளேன். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என்பது நான் சுதந்திரமாக எடுத்த முடிவு. விஜய்யின் மாநாடு முடிந்த ஒரு சில நாட்களிலேயே புத்தக பதிப்பகத்தாரிடம் இந்த தகவல்களைத் தெரிவித்துவிட்டேன்.

He has some kind of plan of action Thol Thirumavalavan MP Interview

எல்லா நேரங்களிலும் முதல்வரைச் சந்திக்க முடியாது. அச்சமயத்தில் மூத்த அமைச்சர்களாக இருப்பவர்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். அந்த அடிப்படையில் அமைச்சர் எ.வ. வேலுவை சந்தித்தேன். இதனைக் கருத்தில் கொண்டு ஆதவ்அர்ஜுனா இவ்வாறு பேசியிருக்க வாய்ப்புள்ளது. ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் இது போன்ற கருத்தைச் சொல்வதே தவறு. அவ்வாறு கருத்துகளைச் சொல்லக் கூடாது. விசிகவில் தொடர வேண்டும் என்று இருந்தால் நினைத்திருந்தால் அவர் 6 மாதத்திற்கு அமைதியாக இருந்து இருப்பார். ஆனால் அவர் மறுபடியும் மறுபடியும் முரண்பாடான கருத்துக்களைச் சொல்வது அவரிடம் ஏதோ ஒரு செயல் திட்டம் இருக்கிறது என்பதை நம்மால் உணர முடிகிறது” எனத் தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்