மக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். அதன் பிறகு மசோதா மீதான விவாதம் நடந்தது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அமித்ஷா, அரசியல் சாசனத்தை விரோதமாக குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இயற்றப்படவில்லை என்று கூறினார். சுமார் ஒன்பது மணி நேரம் நீடித்த நீண்ட விவாதத்திற்கு பின் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் மீது வாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இருப்பினும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் குடியுரிமை சட்டதிருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. மசோதாவிற்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், திமுக, சிவசேனா, திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது மக்களைவியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா பின்னணியில் எந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்றும், இதில் அநீதி என்ற கேள்விக்கே இடமில்லை என்றும் கூறினார். மேலும், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவால் அநீதி ஏற்படும் என கேள்வி எழுப்புவதே தவறு. 1947 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்தவர்களை எல்லாம் இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் இருப்பார்கள். அத்வானி, மன்மோகன் சிங் ஆகியோர் கூட புலம்பெயர்ந்தவர்கள் தான் என கூறினார்.