“பிரதமர் மோடி இந்த நாட்டுக்கு நல்லது செய்கிறார் என்று அவருக்கு ஜால்ரா போடுபவர்கள் தான் கூறுகின்றனர்” என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி செய்தியாளர்களிடம் கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “மணிப்பூர் மாநிலத்தில் மனித உரிமை மீறல்கள் அதிகமாக நடக்கின்றன. அந்த மாநிலத்தில் மெயித்தீஸ் எனும் இந்து சமுதாய மக்கள் 50 சதவீதம் பேர் இருக்கின்றார்கள். இந்த கலவரத்தில், பர்மாவில் உள்ள சீன ஆதரவாளர்கள் மற்ற சமுதாயத்தினரை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். பிரதமர் மோடி அமெரிக்கா செல்வதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். ஆனால், மணிப்பூர் சென்று பொதுமக்களை பார்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கிறார்.
பிரதமர் மோடி உடனடியாக மணிப்பூர் கலவரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் இருக்கும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து செயல்பட்டால் நிச்சயமாக மத்தியில் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த நாட்டிற்கு பிரதமர் மோடி நல்லது செய்கிறார் என்று அவருக்கு ஜால்ரா போடுபவர்கள் தான் கூறுகின்றார்களே தவிர தொண்டர்கள் யாரும் சொல்லவில்லை. மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கம் பெயரை வைக்காதது மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, ‘அண்ணாமலையின் எழுச்சியை எப்படி பார்க்கிறீர்கள்’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர், “அண்ணாமலை யாரு? தமிழ்நாட்டில் பி.ஜே.பி. இருக்கா? நான் இதுவரைக்கும் பி.ஜே.பி.யை எங்கேயும் பார்க்கவில்லை” என்று பதில் அளித்தார்.