புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியைக் கொண்டிருந்த கார் ஒன்று தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்தவர்கள் மது போதையில் இருந்ததாக அந்தப் பகுதி மக்கள் பிடித்துத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் போதை ஒழிப்பு மாரத்தான் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது சாலையில் வந்து கொண்டிருந்த கார் ஒன்று கூட்டத்துக்குள் தாறுமாறாக உள்ளே புகுந்தது. அங்கு நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது மோதி காரானது நின்றது. காரின் முன் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி இருந்தது. காரில் இருந்தவர்கள் மதுபோதையில் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் மாரத்தானில் பங்கேற்ற பள்ளி குழந்தைகள் உயிர்த்தப்பினர். மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய மூன்று பேரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடித்துக் கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.