Published on 03/06/2019 | Edited on 03/06/2019
நடந்து முடிந்த நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல்களில் அதிமுக பெரும் பின்னடைவை சந்தித்து இது குறித்து கட்சி நிர்வாகிகள்,தேர்தல் பொறுப்பாளர்கள்,மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களிடம் தீவிர ஆலோசனையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது.
இடைத்தேர்தலில் 22 தொகுதியில் 9 இடங்களை மட்டுமே அதிமுக கைப்பற்றியது.தேர்தலில் ஓட்டு சதவிகிதம் கடந்த தேர்தலை விட 20சதவிகித வாக்குகளை குறைவாக அதிமுக பெற்றது.இது அதிமுக கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.மேலும் அதிமுக கூட்டணி சார்பாக போட்டியிட்ட அனைத்து கூட்டணி வேட்பாளர்களும் தோல்வி அடைந்தனர். இந்த நிலையில் அதிமுக தோல்வி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளார்.
அதில் தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் என்றும்,கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்பு கொடுத்தார்களா இல்லையா,தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட பணம் சரியாக செலவு செய்யப்பட்டதா இல்லையா,கட்சி நிர்வாகிகள் களப்பணியில் சரியாக வேலை செய்தார்களா இல்லையா என்று பல கேள்விகளை எழுப்ப உள்ளார் என்று தகவல் வருகிறது .மேலும் தேர்தலில் சரியாக வேலை செய்யாத நிர்வாகிகள்,மாவட்ட செயலாளர்கள்,பொறுப்பாளர்கள்,அமைச்சர்கள் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அதிமுக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.இதனால் அதிமுக நிர்வாகிகள் பலரும் கலக்கத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.