துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 10 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்று நேற்று இரவு சென்னை திரும்பினார். அவருடன் அவரது மகனும் தேனி தொகுதி எம்.பியுமான ரவீந்திராத் குமார், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோரும் உடன் சென்றனர். தமிழகம் வந்ததும் ஏர்போர்ட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், அமெரிக்க சுற்றுப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. அமெரிக்க வாழ் இந்தியர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளனர். பத்து நாள் அமெரிக்க சுற்றுப் பயணம் சிறப்பாக முடிந்துவிட்டது. தமிழக வீட்டு வசதி திட்டங்களுக்காக உலக வங்கி 5 ஆயிரம் கோடி நிதி தருவதாக ஒப்புதல் அளித்துள்ளது என்று பேசினார்.

மேலும், ரஜினியின் கருத்துக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து நடிகர் ரஜினி கூறிய கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து வந்த ஓபிஎஸ்ஸை வரவேற்க ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்களே அதிகமாக இருந்தனர். கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள், பொறுப்பாளர்கள் என்று யாரும் ஓபிஎஸ்ஸை வரவேற்க வரவில்லை. ஓபிஎஸ்ஸை வரவேற்க அமைச்சர் என்று பார்த்தால் மாஃபா பாண்டியராஜன் மட்டும் தான் வந்திருந்தார். மேலும் பொதுக்குழுவுக்காக வந்திருந்த அமைச்சர்கள் அனைவரும் சென்னையில் இருந்தும் ஓபிஎஸ்ஸை வரவேற்க செல்லவில்லை என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.
ஓபிஎஸ் மாதிரி கடந்த மாதம் எடப்பாடி வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சென்னை திரும்பிய போது அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் சென்னை வந்து வரவேற்பை அளித்தனர். அதே போல் ஓபிஎஸ்ஸிற்கும் வரவேற்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள் வந்து வரவேற்பு அளிக்காதது ஓபிஎஸ்ஸிற்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது என்கின்றனர். இதற்கு எடப்பாடி ரகசிய உத்தரவு போட்டது தான் காரணம் என்று கூறிவருகின்றனர்.
