![ADMK Leader position poster](http://image.nakkheeran.in/cdn/farfuture/9T6E80Zq1o1fXK9BQAGREKbroRxJBAvaLnESWwh21nI/1655273895/sites/default/files/2022-06/th-6_6.jpg)
![ADMK Leader position poster](http://image.nakkheeran.in/cdn/farfuture/3SlHWkB17UVIQDGPo8nxeijLHtJ_plm3REvzubEJxDg/1655273895/sites/default/files/2022-06/th-7_2.jpg)
![ADMK Leader position poster](http://image.nakkheeran.in/cdn/farfuture/tUJN739locPWlQi8w1xcLrEKHFfllD3JkHrizOkdaAw/1655273895/sites/default/files/2022-06/th-1_22.jpg)
![ADMK Leader position poster](http://image.nakkheeran.in/cdn/farfuture/qIUg4kO3zO3JITuNgwUNhM9Nm-sPFdkNySK4BKFqI0o/1655273895/sites/default/files/2022-06/th-4_11.jpg)
![ADMK Leader position poster](http://image.nakkheeran.in/cdn/farfuture/rOMX4LZ2tSs64hJC8blSwm9j1EKRZ6a7E6XY4XOXbIc/1655273895/sites/default/files/2022-06/th_22.jpg)
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நேற்று (14/06/2022) காலை 11.00 மணிக்கு அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த மாத இறுதியில் அதிமுகவின் பொதுக்குழு கூடவிருக்கும் நிலையில் அது குறித்தான விவகாரங்களை நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதேபோல், அதிமுக அலுவலகத்தில் வெளியே கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் இரு தரப்பினர்களாகப் பிரிந்து ஒரு தரப்பினர் ஒற்றை தலைமை வேண்டும் என்றும் மற்றொரு தரப்பு ஓ.பி.எஸ். தலைமையில் ஒற்றைத் தலைமை வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர். அதிமுக செய்தித் தொடர்பாளரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் கூட்டம் முடிந்து வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்துப் பேசியதாகத் தெரிவித்தார். இப்படி இன்றைய அதிமுக ஆலோசனைக் கூட்டம் பரபரப்பாக நடந்தது.
அதேபோல், நேற்று இரவு சென்னையில் முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். அதில், முன்னாள் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், காமராஜ் மற்றும் ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இருந்தனர். இது இன்னும் அரசியலில் பரபரப்பைக் கூட்டியது. அதிமுக அலுவலகத்தின் உள்ளேயும், வெளியேயும் ஒற்றைத் தலைமைக் குறித்தான விவாதங்கள் எழுந்துள்ள இந்தநிலையில், ‘நாங்களும் ஒற்றைத் தலைமை போஸ்டர் ஒட்டுவோம்ல.. வாட்ஸ்-அப் குரூப்ல டிசைன் டிசைனா அனுப்புவோம்ல..’ என்று ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கோவை மண்டலம், சின்னமனூர், கம்பம், போடி, பெரியகுளம் அல்லிநகரம், ராமநாதபுரம், உத்தமபாளையம், கடமலை கயிலை ஆகிய ஊர்களில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து ‘ஒற்றைத் தலைமையேற்க வா!’ என ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கம்பம் வடக்கு மற்றும் தெற்கில், ‘அதிமுகவின் மூன்றாம் தலைமை’ என்றும், இராமநாதபுரம் மாவட்டத்தில், ‘அன்று தர்மயுத்தம் இல்லையெனில் ஆட்சியும், கட்சியும் இல்லை! தாயின் தலைமகனே தலைமையேற்க வா’ என்றும் ஒட்டியுள்ளனர்.
இப்படி ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தங்கள் ஆதரவைக் காட்டிவர, 'அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி' என்ற வாசகங்களுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளம் உட்பட தேனி மாவட்டம் முழுவதும் எடப்பாடி ஆதரவாளர்களும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.