தமிழக சட்டமன்றம் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் இருபெரும் கட்சிகளான தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்திவருகின்றன. தி.மு.க.வில் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பல்வேறு மாவட்டங்களில் ‘அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்’ எனும் தேர்தல் பிரச்சாரங்களை நடத்திவருகின்றனர். அதேபோல் அ.தி.மு.க. சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘வெற்றிநடை போடும் தமிழகம்’ எனும் தேர்தல் பிரச்சாரத்தை நடத்திவருகிறார்.
மதுரை பெருங்குடியில் நடந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கலைஞர் ஆட்சியில் அவர் குடும்பம்தான் பிழைத்தது. அவர் குடும்பத்தில் இருப்பவர்கள்தான் அதிகாரத்திற்கும் பதவிக்கும் வரமுடியும். மேடையில் நிற்கும் சாதாரண மக்களும் கீழே நின்றிருப்பவர்களும் தி.மு.க.வில் எந்தக் காலத்திலும் எந்தப் பதவிக்கும் வரவே முடியாது. முதலில் கலைஞர் இருந்தார், பின் ஸ்டாலின் வந்தார், தற்போது உதயநிதி வந்துவிட்டார். ஸ்டாலினின் பேரன் தற்போது தயாராகிவருகிறார். இந்த வாரிசு அரசியலுக்கு முடிவுகட்டும் தேர்தல், இந்த 2021-ஆம் ஆண்டு தேர்தல்” என்று பேசினார்.