தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு தினமும் ஒவ்வொரு துறை மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. அதில் ஒன்றாக இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கை இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே. சேகர்பாபு, முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஒரு கவிதையை வாசித்தார்.
அவர் வாசித்த கவிதை:
கங்காரு தன் குட்டியை எப்படி
மடியிலேயே சுமந்துகொண்டு சென்றதோ
அதுபோல் என்னையும் என் குடும்பத்தையும்
காப்பாற்றுபவர் நீங்கள்
என் குடும்பத்தின்
இன்ப துன்ப நிகழ்வுகளில் எல்லாம்
எனக்கு உறுதுணையாக இருந்தவர் நீங்கள்
நான் தடுமாறி விழுவதற்கு முன்பே
என்னைத் தாங்கிப் பிடித்தவர்,
என் கண்களிலிருந்து புறப்படும் கண்ணீர்
என் கன்னத்தைத் தொடுவதற்கு முன்பே
அதை தங்களுடைய பொற்கரங்களால்
துடைத்து எடுத்தவர்
சில வல்லூறுகளால் துரத்தப்பட்ட புறா
சிபி சக்கரவர்த்தி மன்னனிடம்
அடைக்கலம் கேட்டு வந்ததுபோல
நான் உங்களிடம் அடைக்கலம் கேட்டுவந்தேன்
எனக்கு அடைக்கலமும் தந்தீர்கள்
உங்கள் படைக்கலனாகவும் என்னை ஏற்றுக்கொண்டீர்கள்
என் பொது வாழ்வில்
புது வாழ்வு தந்த முதல்வர் நீங்கள்
என்றென்றைக்கும் என்னுடைய தலைவர் நீங்கள்
நான் உங்களின் தொண்டன்
இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சராக இருக்கின்ற
தங்களுடைய அன்பையும் ஆதரவையும் கரிசனத்தையும் பெற்றிருக்கின்றேன்
இதற்கு நன்றி சொல்ல மூன்றெழுத்து போதாது
ராமனுக்குச் சேவையாற்றிய அனுமான் போல்
உங்களோடு இருப்பேன்
நான் கேட்டதையும் கேட்காததையும்
தந்த முதல்வர் நீங்கள்
இன்னும் முதல்வரிடம் ஒன்றே ஒன்று கேட்கப்போகிறேன்
இயற்கை என்னை இறுதியாக அழைக்கின்றபோது
உங்கள் பூவிழி கண்ணிலிருந்து
ஒரு சொட்டு கண்ணீர்
என் உடல் மீது விழ வேண்டும்
என்பதுதான் என்னுடைய ஆசை.
என்று பேசினார். இதனைக் கேட்ட சக திமுக எம்.எல்.ஏ.க்களும், முதல்வர் ஸ்டாலினும் உணர்ச்சிவசப்பட்டனர்.