
த.வெ.க.வின் 2ஆம் ஆண்டு துவக்க விழா செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று (26.02.2025) நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் விஜய் பேசுகையில், “இந்த அரசியல் என்றால் வேறு லெவல் தானே?. ஏனென்றால் அரசியலில் மட்டும் தான் வித்தியாசமான ஒன்றைப் பார்க்க முடியும். யார் யாரை எப்போது எதிர்ப்பார்கள் என்று தெரியாது. யார் யாரை எப்போது ஆதரிப்பார்கள் என்றே தெரியாது. அதனைக் கணிக்கவும் முடியாது. அதனால் தான் முன்னாடியெல்லாம் சொல்வதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதாவது அரசியலில் நிரந்தர நண்பனும், நிரந்தர நிரந்தர எதிரியும் கிடையாது என்று சொல்வார்கள்.
அரசியலுக்கு யார் வேண்டுமென்றாலும் வரலாம். அது ஒரு ஜனநாயக உரிமை என்று சொல்வார்கள். ஆனால் மக்களுக்கு ரொம்ப ரொம்ப பிடித்துப் போன ஒருவன் அரசியலுக்கு வருகிறான் என்றால் அதனைக் கண்டிப்பாக நல்லவர்கள் எல்லாம் வரவேற்பார்கள். ஆனால் அதிகாரத்தில் உள்ள ஒரு சிலருக்கு இதனால் எரிச்சல் இருக்கத் தானே செய்யும். அதனால் தான் அவர்களுக்கு, திடீரென்று ஒருவர் அரசியலுக்கு வந்து விட்டானே என்று. இதுவரை நாம் சொன்ன பொய்களை எல்லாம் நம்பிக்கொண்டு நமக்கு வாக்களித்தார்கள். ஆனால் இப்போது வந்த இவன் சொல்வதெல்லாம் பார்த்தால் மக்கள் மனதுக்கு நெருக்கமாக உள்ளது. அதுவே நமக்குப் பெரிய நெருக்கடியாக இருக்கும்.
இவரை என்ன பண்ணலாம் என்ன செய்யலாம் இவனை எப்படி க்ளோஸ் பண்ணலாம் என ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த குழப்பத்தில் கத்துவதா?. கதறுவதா என்று என்ன செய்வது என்று தெரியாமல் வருகிறவன் போகிறவன் எல்லாம் கட்சி ஆரம்பிக்கிறார்கள் என்று சொல்லி இப்படி ஏதாவது பேச ஆரம்பிப்பார்கள். ஆட்சியில் உள்ளவர்கள் நமக்கு எதிராக இப்படிப் பேசுபவர்கள். இந்த மாதிரி இப்படிப்பட்ட ஒரு அரசியல் களத்தில் கொஞ்சம் கூட கொஞ்சம் கூட பயம் இல்லாமல் பதட்டமில்லாமல் வரும் எதிர்ப்புகளை எல்லாம் சும்மா லெஃப்ட் கேண்டில் (LEFT HAND) டீல் பண்ணிக்கொண்டு கொண்டுள்ளோம். தமிழக வெற்றிக் கழகம் முதலாவது அண்டைக் கடந்து 2வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.
இந்த ஒரு காலகட்டம் தான் மிக மிக முக்கியமான காலகட்டம். ஏனென்றால் ஒரு அரசியல் கட்சியின் பலமே கட்டமைப்பு தான். அதாவது ஆலமரம் போன்று கட்சி வளர வேண்டும் என்றால் வேர்களும் விழுதுகளும் பலமாக இருக்க வேண்டும் அல்லவா? அப்படித்தான் அமைப்பும். இதற்காகக் கட்சியைப் பலப்படுத்தும் பணியைச் செய்து கொண்டுள்ளோம். தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நேரத்தில் தான் கட்சி மீது புகார் எழுந்துள்ளது. அது என்னவென்றால் நியமிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் வெறும் இளைஞர்களாக உள்ளதாகக் கூறுகின்றனர். அப்படி இளைஞர்களாக இருந்தால் என்ன?. அறிஞர் அண்ணா கட்சி ஆரம்பித்த போதும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்தபோது அவர்கள் பின்னாடி நின்றதும் இளைஞர்கள் தான். அந்த இளைஞர்களால் தான் 1967 மற்றும் 1977 ஆம் ஆண்டில் மிகப்பெரிய தேர்தல் வெற்றி கிடைத்தது. அதுதான் வரலாறு” எனப் பேசினார்.