ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சு.முத்துச்சாமியின் ஈரோடு வீட்டிற்கு இன்று காலை 11 மணிக்கு திடீரென வருகை தந்தார் அதிமுகவைச் சேர்ந்த சபாநாயகர் தனபால். அவருடன் ஈரோடு அதிமுக எம்.எல்.ஏவான தென்னரசு மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் வந்திருந்தனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முத்துச்சாமியின் மனைவி காலமானார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உட்பட மாநில அமைச்சர்கள், அதிமுகவின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் வந்திருந்தனர். அந்த நேரத்தில் சபாநாயகர் தனபாலுக்கு டெங்கு காய்ச்சல் இருந்ததால் வரவில்லை என்றும் துக்கம் விசாரிக்கவே முத்துச்சாமி வீட்டிற்கு வந்ததாகவும் அதிமுவினர் கூறினார்கள்.
முத்துச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்த தனபால் இருவரும் சுமார் 10 நிமிடங்கள் உள் அறைக்கு சென்று தனியாக பேசினார்கள். அதிமுகவின் சட்டமன்ற சபாநாயகரான தனபால் திமுக மாவட்டச் செயலாளர் வீட்டிற்கு வந்தது அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் முத்துச்சாமி முன்பு அதிமுகவில் இருந்தபோது சீனியர் லீடராக இருந்தார். அந்த அடிப்படையிலே அவரது மனைவி இறப்பிற்கு முதல்வரில் இருந்து சபாநாயகர் வரை நேரில் வந்தார்கள் என்று கூறப்படுகிறது.