ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்களை அறிவித்தும் தள்ளாடி வருகிறது அதிமுக. எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என பிரிந்து கிடக்கும் சூழ்நிலையில் பொதுக்குழு நடத்தி வேட்பாளரை தேர்வு செய்ய நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.
இந்தநிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், உச்சநீதிமன்றம் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறது. பொதுக்குழு உறுப்பினர்களிடம் தெரிந்து கொண்டு அவை தலைவராக இருப்பவர் இங்கிருந்து தேர்தல் ஆணையத்திற்கு சொல்ல வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அதில் யாரை சேர்த்துக் கொள்ள முடியாது என ஆர்ப்பரித்தார்களோ கொக்கரித்தார்களோ அதற்கு மாறாக ஓபிஎஸ்-ஐ கலந்து ஆலோசிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
அது சம்பந்தமாக சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஆகவே நாங்கள் உச்சநீதிமன்ற ஆணையை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம். ரோட்டில் போகின்ற தொண்டர்கள், பொதுமக்கள் என அத்தனை பேரும் 'எல்லாரும் சேர்ந்து ஒன்றாக போங்கள்; அப்போதுதான் நல்லா இருக்கும்; பிரிந்து இருந்தால் வீணா போய்விடும்; கட்சியும் போய்விடும் நீங்களும் காணாமல் போய்விடுவீர்கள்' என பொதுமக்களும், தொண்டர்களும் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் அதனை ஏற்றுக் கொண்டு எந்த நேரமும் கையெழுத்துப் போடத் தயார் ஒற்றுமையாக போக என்பது தான் ஓபிஎஸ்-இன் ஒரே குரலாக இருந்தது. இது தமிழகம் முழுவதும் எதிரொலித்தது. 'அவர் ஒத்துக்கிறாரு இவர்தான் வரமாட்டேங்குகிறார்' என்ற பேச்சு இருந்தது. இப்போது உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டது. ஆகவே வேறு வழி இல்லை. ஒப்புக்கொண்டு வேறு வழி இல்லாமல் செயல்பட்டு ஓபிஎஸ்-ஐ ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என ஆணை பிறப்பித்த பின்னால் என்ன செய்யப் போகிறார் இபிஎஸ். ஒன்றும் செய்ய முடியாது'' என்றார்.