மதுவிலக்கு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடத்தும் மாநாட்டில் அதிமுகவினரும் பங்கேற்கலாம் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்திருந்தார். அதே சமயம் அவர் அ.தி.மு.கவிற்கு அழைப்பு விடுத்திருந்தது, திருமாவளவன் தி.மு.கவில் இருந்து பிரிந்து அதிமுகவோடு கூட்டணி வைக்கப்போகிறார் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பேசுபொருளானது. இதற்குக் கூட்டணியைச் சார்ந்தவர்கள், கூட்டணியைச் சாராதவர்கள் எனப் பலரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். இந்த விவகாரம் அடங்குவதற்குள், ‘ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என வேண்டும்’ என்று எக்ஸ் சமூக வலைத்தளத்தில் திருமாவளவன் பேசிய வீடியோ ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியது.
இத்தகைய சூழலில் தான் விசிகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்தார். அதில் திமுகவுடனான கூட்டணி குறித்து கருத்துகளைத் தெரிவித்விக்கையில், “ விசிக கூட்டணி இல்லாமல் வட மாவட்டங்களில் திமுக வெல்ல முடியாது. குறைந்தபட்ச செயல் திட்ட அடிப்படையில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். தமிழக அமைச்சரவையில் விசிக, இடதுசாரிகள், இஸ்லாமிய கட்சிகளுக்கும் இடம் அளிக்க வேண்டும்” எனப் பல்வேறு கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தார். இந்த கருத்துகள் திமுக - விசிக இடையே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து ஆதவ் ஆர்ஜூனாவின் கருத்துக்கு அக்கட்சியின் நாடாளுமன்ற ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “திமுக – விசிக கூட்டணி எண்ணிக்கை அடிப்படையிலானது அல்ல. அது ஒரு கொள்கைக் கூட்டணி. விசிக இல்லையென்றால் வடமாவட்டங்களில் திமுகவால் தேர்தலில் வெல்ல முடியாது என்ற கருத்து உண்மைக்கு மாறானது. அந்த கருத்து அது மட்டுமல்லாமல் அரசியல் முதிர்ச்சியற்றது. கூட்டல் கழித்தல் கணக்குக்கு மாறாகக் கொள்கை அடிப்படையிலேயே திமுக கூட்டணி வெற்றி பெற்றிருப்பதை அணுக வேண்டும். தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் வெற்றி பெற திமுகவும் முக்கிய காரணம். திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெல்ல விசிக உதவியது என்பது உண்மை. அதேபோல, விசிகவுக்கு2 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 4 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பது திமுக உடனான கூட்டணியால்தான்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசிக பொதுச்செயலாளர் வன்னியரசு எம்.எல்.ஏ. செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், “துணை முதல்வர் பதபி குறித்த ஆதவ் அர்ஜுனின் கருத்து விசிகவுக்கு ஏற்புடையதல்ல. தனி நபர் மீதான விமர்சனத்தை விசிக முன்மொழியாது. ஆதவ் அர்ஜுனின் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து. விசிக திமுகவுடன் கூட்டணியில் தான் தொடர்கிறோம் எனவே, 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும்” எனத் தெரிவித்தார்.