ஜம்மு காஷ்மீரில் குலாம் நபி ஆசாத்திற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து 64 மூத்த தலைவர்கள் பதவி விலகியுள்ளனர்.
கடந்த 26ம் தேதி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகினார். மேலும் காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா காந்திக்கு அவர் எழுதிய கடிதத்தில் கட்சியில் மூத்த தலைவர்களுக்கு மரியாதை தரப்படுவதில்லை என்றும், காங்கிரஸ் கட்சியின் தோல்விகளுக்கு ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான செயல்பாடுகள் தான் காரணம் என்றும் கூறியிருந்தார். மேலும் கட்சியில் சோனியா காந்தி பெயரளவில் மட்டுமே தலைவராக செயல்படுவதாகவும், முடிவுகள் அனைத்தையும் ராகுல் காந்தியே எடுக்கிறார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அண்மையில் தனிக் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்த குலாம் நபி ஆசாத் "தனது கட்சியின் முதல் பிரிவு ஜம்மு காஷ்மீரில் தொடங்கப்படும். காங்கிரசில் இருந்து விலகியது திடீரென எடுக்கப்பட்ட முடிவு இல்லை. மீண்டும் காங்கிரஸில் இணைவதற்கான வாய்ப்பு இல்லை. பாஜகவில் இணையப்போவதாக கடந்த மூன்று ஆண்டுகளாக பலரும் கூறி வந்தனர். அவர்களுக்கு நான் புதிய கட்சியை தொடங்கியதே பதில்" எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் துணை முதல்வர் தாராசந்த் உட்பட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், உறுப்பினர்கள் 64 பேர் கட்சியில் இருந்து விலகுவதாக தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். மேலும் குலாம் நபி ஆசாத் வரும் 4ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் தலைவர்கள் பலரும் பதவி விலகி வரும் சூழலில் காங்கிரஸ் கட்சியின் முழுநேர தலைவருக்கான தேர்தல் வரும் 17ல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.