சென்னையில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் இன்று (22.12.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மற்றும் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பாராளுமன்றத்தில் உரையாற்றியது ஆகியவை பேசு பொருளாகி இருக்கும் நிலையில் பல்வேறு தீர்மானங்களை திமுக நிறைவேற்றியுள்ளது.
அதன்படி நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை தரம் தாழ்ந்து பேசிய அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து திமுக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. மேலும் அமித்ஷாவை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை நடத்திய திமுக நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பெஞ்சல் புயல் பாதிப்பு நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வலியுறுத்தல் வைக்கப்பட்டுள்ளது. பேரிடர் நிதி என்பது பாஜகவின் கட்சி நிதி அல்ல என்பதை மனதில் நிலை நிறுத்த வேண்டும். இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மாநில அரசு கேட்கும் பேரிடர் நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
டங்ஸ்டன் கனிம ஏல சுரங்க சட்டத்தை ஆதரித்த அதிமுக, பாஜகவிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சாத்தனூர் அணையை படிப்படியாக திறந்த முதல்வர், துணை முதல்வர், அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. படிப்படியாக சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் மக்கள் உயிர் பாதுகாக்கப்பட்டதாக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற இன்றே புறப்படுவீர்; போராட்ட பரணி பாடுவீர் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான கனிமொழி பேசுகையில், “மாநில உரிமைகளை பறிப்பதுதான் பாஜகவின் நோக்கமாக இருக்கிறது. மாநில உரிமைகளை மட்டும் பேசிய நிலை மாறி நாட்டுக்கே வழிகாட்டும் இயக்கமாக திமுக மாறியிருக்கிறது. 50 சதவீத வாக்குகள் திமுக கூட்டணிக்கு கிடைக்கும். அதே சமயம் மகளிர் வாக்குகளை முழுமையாக கவரும்படி மகளிரணி பணிகளைத் தொடங்கிட வேண்டும். வீடு வீடாகச் சென்று சாதனைகளை எடுத்துச் சொல்லும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பெண் வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துவரும் பணி வரை திமுக மகளிர் செய்வார்கள்” எனத் தெரிவித்தார்.