சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க.வின் வர்த்தக அணி பிரிவின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு வர்த்தக அணி பிரிவின் மாநிலத் தலைவர் சிந்து ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் வர்த்தக அணி பிரிவின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், எதிர்வருகின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெற வர்த்தக அணி முழுமையாக உழைப்பது என்றும், தமிழகத்தில் தொழில் முன்னேற்றத் திட்டங்களை உருவாக்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி கூறியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வர்த்தக அணி நிர்வாகிகள், அந்தந்த சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பது, வருகிற பிப்ரவரி 24- ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை தமிழகம் முழுக்க வர்த்தக அணி சார்பில் சிறப்பாகக் கொண்டாடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பேசிய வர்த்தக அணி பிரிவின் மாநிலத் தலைவர் சிந்து ரவிச்சந்திரன், "அ.தி.மு.க. என்பது ஒரு எஃகு கோட்டை; ஒன்றரை கோடி இயக்கத் தொண்டர்கள் உள்ளார்கள். ஏற்கனவே, இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியில் இருக்கிறோம். வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்று மூன்றாம் முறையும், அ.தி.மு.க. தமிழகத்தை ஆளும் எனச் சபதம் ஏற்போம்" என்றார்.