நாட்டின் 76வது குடியரசு தின விழா வரும் ஜனவரி 26ஆம் தேதி (26.01.2025) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், குடியரசுத் தலைவர் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவார். அதன் பின்னர் பாதுகாப்பு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொள்வார்.
இவ்விழாவின் ஒரு பகுதியாக நாட்டின் பன்முகக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்திகள், முப்படைகளின் வாகன அணிவகுப்பு, விமானப்படையின் சாகசங்கள் மற்றும் ராணுவ பலத்தை பறைசாற்றும் சாகசங்கள் ஆகியவை நடைபெற்று வருகின்றன. இந்த விழாவில் பிரதமர், மத்திய அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்வர். அதோடு ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவிற்கு வெளிநாட்டுத் தலைவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவதும் வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “குடியரசு தின விழாவில், தலைநகர் டில்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில், தமிழகத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை உயர்த்தி காட்டும் தமிழகத்தின் அலங்கார அணிவகுப்பு ஊர்தி அதிமுக ஆட்சிக்காலங்களில் இடம்பெறுவது மரபு. ஆனால் திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால், குடியரசு தின விழாவில் இந்த ஆண்டும் அலங்கார ஊர்தி இடம்பெறாத நிலை உருவாகியுள்ளதாக அறிகிறேன். எனவே முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் தொடர் அலட்சிய நிர்வாகத்திற்கும், அனுமதி வழங்காத மத்திய அரசுக்கும் எனது கடுமையான கண்டனங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த முறை (ஜனவரி 26, 2024) டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற தமிழ்நாடு ஊர்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த அணிவகுப்பில் குடவோலை முறையை எடுத்துரைக்கும் வகையில் தமிழ்நாடு ஊர்தி இடம்பெற்றது. அப்போது ‘குடவோலை கண்ட தமிழ்க் குடியே வாழிய வாழியவே’ என்ற பாடலுடன் ஊர்தி அணிவகுப்பாகச் சென்றது குறிப்பிடத்தக்கது.