Published on 25/06/2018 | Edited on 25/06/2018
தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில், 17 பேர் சார்பில், உச்ச நீதிமன்றத்தில், புதிய மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு வரும் 27ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகர் எடுத்த முடிவு சரியானது; அவரது முடிவில், நீதிமன்றம் தலையிட முடியாது என தீர்ப்பளித்தார். மற்றொரு நீதிபதி சுந்தர் அளித்த தீர்ப்பில், சபாநாயகர் எடுத்த முடிவு தவறானது' என்றார். இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால், இந்த வழக்கு, மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு சென்றது. இந்த வழக்கை விசாரிக்க, மூன்றாவது நீதிபதியாக, விமலா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தங்க தமிழ்செல்வனை தவிர்த்து 17 பேர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சபாநாயகர் தனபால், எங்களை தகுதி நீக்கம் செய்தது சரியல்ல என்பதை நிரூபிக்க, உச்ச நீதிமன்றம் வாய்ப்பு தர வேண்டும். 'அதற்கு வசதியாக, சென்னை உயர் நீதி மன்றத்தில் உள்ள, இது தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்த மனு இந்த மனு வரும் 27ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
இதற்கிடையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட, எம்.எல்.ஏ.க்களில், தங்க தமிழ்செல்வன், தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு, ஆண்டிப்பட்டி தொகுதியில், இடைத்தேர்தலை சந்திக்க விரும்புவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.