சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, "அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி வரும் பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ராகுல்காந்தி பிரச்சாரம் மேற்கொள்கிறார். ராகுல்காந்தியின் தென்மாவட்ட வருகை முடிந்த பிறகு காங்கிரஸ் கட்சியின் சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்படும். பிரதமர் தமிழகம் வந்தபோது மக்களைச் சந்திக்கவில்லை. மக்கள் பிரச்சனைகள் குறித்துக் கேட்டறியவே ராகுல்காந்தி தமிழகம் வருகிறார். பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை முன் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து அடுத்த மாதம் காங்கிரஸ் போராட்டம் நடத்தும்" என்றார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் இம்மாத இறுதியில் தமிழகம் வந்து சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.