நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் பெற்று ஏறத்தாழ 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரம் வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அதிமுகவின் இந்த தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இன்று ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிலையில் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். முதலில் பேசிய கே.எஸ்.அழகிரி, “காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். திமுக தலைமையிலான கூட்டணிக்கு கிடைத்த இந்த வெற்றி மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிக்கு கிடைத்த நற்சான்று. பாஜகவாக இருந்தாலும் அதிமுகவாக இருந்தாலும் ஒரு தெளிவில்லாமல் இருந்தார்கள். எங்கள் கூட்டணிக்கு தெளிவு இருந்தது. சில இடங்களில் மோடியின் படத்தை அதிமுக பயன்படுத்தியது. சில இடங்களில் பாஜக கொடி கூட பயன்படுத்தவில்லை.” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய இளங்கோவன், “அதிமுகவினர், திமுகவினர் மீது குற்றம் சொல்லலாம். ஆனால் அதிமுக வேட்பாளர் தென்னரசு ஈரோடு கிழக்கில் தேர்தல் முடிந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ‘தேர்தல் சுமூகமாக நடந்தது. தேர்தல் ஆணையம் மிக நியாயமாக நடந்தது. எந்த தவறும் நடக்கவில்லை. ஈரோட்டை பொறுத்தவரை நாங்கள் நியாயமானவர்கள். எந்த சச்சரவுகளும் ஏற்படவில்லை’ என்பதைத்தான் மிகத் தெளிவாக தொலைக்காட்சியில் சொன்னார். இரண்டு நாட்களுக்குப் பின் தேர்தலில் தோற்ற பின் இபிஎஸ் சொல்லிக் கொடுத்ததை அவர் சொல்லிக் கொண்டுள்ளார். ஜெயக்குமாருக்கு கெட்ட கனவுகள் தினம் வரும். அவர் மீது அதிகமாக வழக்குகள் உள்ளன. அதிலிருந்து அவரை காப்பாற்றிக் கொள்ள சொல்லுங்கள். பிறகு மற்றவர்களைப் பற்றி பேசலாம்.” என்றார்.