உலகின் பல நாடுகளில் கரோனா பாதிப்பு அதிகப்படியாக இருந்து வருகின்றது. இதுவரை 25 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 1.7 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 620-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 18000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர் நலத்திட்ட உதவிகளை சமூக விலகலை கடைபிடித்து வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், ஆந்திர மாநிலத்தின், நகரி தொகுதி எம்.எல்.ஏ. ரோஜா பங்கேற்ற ஒரு விழாவில் சமூக விலகல் கடைப்பிடிக்கப்படவில்லை. இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவருக்கு வழிநெடுக மலர் துவி மரியாதை செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு அலப்பறைகளும் அவர் ஒரு தண்ணீர் குழாய் திறப்பிற்காக சென்றபோது நடைபெற்றவைகளாகும். இந்த விவகாரத்தை அம்மாநில எதிர்கட்சியினர் தற்போது கையில் எடுத்துள்ளனர். நடிகை ரோஜா ஆந்திர மாநிலத்தை ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.