
விடியவிடிய வெப்சீரிஸ் பார்த்த இளைஞரால் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்திலிருந்து 75 பேர் உயிர் தப்பிய சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.
மும்பையின் டூம்ப்விளியில் கொபர் என்ற இடத்தில் உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தில் 75 பேர் வசித்து வந்துள்ளனர். கட்டப்பட்டு நீண்ட காலமான இந்த கட்டிடம் எந்நேரத்திலும் இடிந்து விழலாம் என 9 மாதங்களுக்கு முன்பே நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனாலும் அரசு எச்சரிக்கையை மீறி அந்த கட்டிடத்தில் 75 பேர் வசித்து வந்துள்ளனர். இந்தச் சூழலில் வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்குக் கட்டிடத்தில் விரிசல் விழ ஆரம்பித்துள்ளது.
அங்கிருந்த மக்கள் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்த நிலையில், அங்கு குடியிருந்த குணால் என்ற இளைஞர் செல்போனில் வெப் சீரிஸ் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது கட்டிடத்தில் விரிசல் விழுவதைக் கண்ட குணால், உடனே விரைந்து செயல்பட்டு அங்கிருந்த மக்களை எழுப்பியுள்ளார். இதனையடுத்து மக்கள் அனைவரும் சாலையில் தஞ்சமடைந்தனர். அனைவரும் வெளியேறிய 20வது நிமிடத்தில் கட்டிடம் முழுமையாகச் சரிந்து விழுந்தது. இதனையடுத்து தங்களது உயிரைக் காப்பாற்றிய இளைஞருக்கு அங்கு வசித்து வந்த மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.