உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் பல கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னிலையில் வகித்து வந்த நிலையில் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக 267 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி- 127 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி-03 இடங்களிலும், காங்கிரஸ்-03 இடங்களிலும், மற்றவை 03 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
பஞ்சாப் சட்டமன்றத்தில் உள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி 91 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும், அகாலிதளம் 06 இடங்களிலும் பாஜக 02 இடங்களிலும், மற்றவை 01 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. காங்கிரசிலிருந்து புதிய கட்சி துவங்கிய பஞ்சாப் முன்னாள் முதல்வர் அம்ரிந்தர் சிங் பட்டியாலா தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். அதேபோல் பஞ்சாப் மக்களின் இந்த தீர்ப்பையும்.கடவுளின் முடிவையும் பணிவுடன் ஏற்கிறேன் என காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளர் சித்து தெரிவித்துள்ளார். பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சி உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் அக்கட்சியினர் அவர்களது சின்னமான துடைப்பதுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மிகப்பெரிய புரட்சியைச் செய்துகாட்டிய பஞ்சாப் மக்களுக்கு வாழ்த்துகள் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.