உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, அங்கு அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அசாதுதீன் ஓவைசி, "சிஏஏ மற்றும் என்.ஆர்.சி.யை வேளாண் சட்டங்களைப் போல திரும்பப் பெற வேண்டும். சிஏஏ அரசியலமைப்பிற்கு எதிரானது. அதை திரும்பப் பெறாவிட்டால், நாங்கள் தெருவுக்கு வந்து போராடுவோம். இங்கு இன்னொரு ஷாஹீன் பாக் ஏற்படும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இன்று கான்பூரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், அசாதுதீன் ஓவைசிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் யோகி ஆதித்யாநாத் பேசியதாவது; சிஏஏ என்ற பெயரில் உணர்ச்சிகளை தூண்டும் நபரை நான் எச்சரிக்க விரும்புகிறேன். அவர்கள் அதைச் செய்ய முயற்சித்தால், அதை எப்படி கடுமையாக கையாள்வது என்பது மாநில அரசுக்குத் தெரியும் என்பதை அப்பா ஜான்' மற்றும் 'சாச்சா ஜானை' போதிப்பவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
மாநிலத்தில் உணர்ச்சிகளை தூண்ட விரும்பும் சமாஜ்வாதி கட்சியின் ஏஜெண்டாக ஒவைசி செயல்படுகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். இன்றைய அரசு கலவரக்காரர்களைப் பாதுகாக்காது. மாறாக அவர்களின் நெஞ்சில் புல்டோசரை ஏற்றும். இவ்வாறு யோகி ஆதித்யாநாத் கூறியுள்ளார்.