கடந்த 1994ஆம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த நம்பி நாராயணன் என்ற இஸ்ரோ விஞ்ஞானி விண்வெளி திட்ட ரகசியங்களை வெளிநாடுகளுக்கு விற்றுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில், கேரள போலீஸார் நம்பி நாராயணனைக் கைது செய்து விசாரித்தனர். இதில் அப்போது கேரளாவின் முதல்வராக இருந்த கருணாகரனுக்கும் சம்மந்தம் இருக்கும் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி, கருணாகரனைப் பதவிவிலக செய்தது.
இதனையடுத்து, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதில் எந்தவித உளவு சதியும் இல்லை, தவறாக வழக்கு தொடர்ந்த போலீஸார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றது. நம்பி நாராயணன், தேசிய மனித உரிமை ஆணையத்தில் மன உளைச்சலுக்கு ஆளானதால் நஷ்ட ஈடு வேண்டும் என்றார்.
இந்நிலையில், கேரள உயர் நீதிமன்றம் 2015ம் ஆண்டு போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை கோரும் மனுவைத் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து நம்பி நாராயணன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அவருக்கு ரூ.50 லட்சம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அவருக்கு ரூ.50 லட்சத்தை கேரள மாநில அரசு வழங்கியது. அதற்கடுத்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டதன் பேரில் 10 லட்சம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க உத்தரவிடக்கோரி, திருவனந்தபுரம் சார்பு நீதி மன்றத்தில் நம்பி நாராயணன் மனுத் தாக்கல் செய்தார். பின்னர் அவருக்குக் கூடுதலாக ரூ.1 கோடியே 30 லட்சம் இழப்பீடு வழங்க கேரள அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை அளவில் முடிவு எடுக்கப்பட்டு, நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தொகையைக் கேரள அரசு வழங்கியுள்ளது.