கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காததால், இழுபறி நிலை ஏற்பட்டது. இதையடுத்து பாஜகவும், காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளமும் தனித்தனியாக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரின. ஆனால், ஆளுநர் வஜுபாய் வாலா பாஜகவின் எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார்.
எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக காங்கிரஸ் - மஜத கூட்டாக உச்சநீதிமன்றத்தில் நேற்று இரவு மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நள்ளிரவு 2 மணி முதல், விசாரிக்கப்பட்டு வந்தது. நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண், எஸ்ஏ போப்தே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. இதில் எடியூரப்பா பதவி ஏற்பதற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதைதொடர்ந்து கர்நாடகாவின் 23வது முதல்வராக எடியூரப்பா இன்று காலை பதவியேற்றார்.
இந்நிலையில், எடியூரப்பா பதவியேற்புக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், எடியூரப்பா பதவியேற்பை கண்டித்து கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே காங்கிரசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், அசோக் கெலாட், மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால் மற்றும் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.