புதுச்சேரியில் உலக சாதனைக்காக கலர் கோலமாவுகளைக் கொண்டு 52 ஆயிரம் சதுர அடியில் ஜி20 லோகா வரைந்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.
ஜி20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை வகித்துள்ளது. அதையொட்டி இம்முறை நாடு முழுவதிலும் முக்கிய நகரங்களில் ஜி20 மாநாடுகள் நடந்து வருகின்றன. தொடக்க நிலை மாநாடு புதுச்சேரியிலும் நடந்தது. இச்சூழலில் புதுச்சேரி விழிகள் அறக்கட்டளை சார்பில் புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் அரசுப் பள்ளி மைதானத்தில் ஜி20 லோகாவை பிரமாண்டமாக வரையும் நிகழ்வு நடந்தது. இம்முயற்சியில் சேலத்தில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கவுசிகா, புதுச்சேரியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வாணிஸ்ரீ ஆகியோர் இணைந்து சுமார் 52 ஆயிரம் சதுர அடியில் 35 ஆயிரம் கிலோ கலர் கோல மாவுகளைக் கொண்டு பிரமாண்டமாக வரைந்தனர். 24 மணி நேரத்தில் இந்த பிரமாண்ட லோகோவை வரைந்து சாதனை படைத்தனர். இவர்களது சாதனையை கலாம் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது.
பின்னர் இறுதி நாளில் புதுச்சேரி சாபாநாயகர் செல்வம் நேரில் வந்து உலக சாதனை நிகழ்வை பார்த்து ரசித்து மாணவிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் உலக சாதனைக்கான சான்றிதழையும் வழங்கி பாராட்டினார். இந்த முயற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழிகள் அறக்கட்டளை நிறுவனர் பிரேம்குமார், செயலாளர் கீர்த்தனா ஆகியோர் செய்திருந்தனர்.