ஆண்களின் கோட்டையாக இருந்த வாகன தயாரிப்புத் துறையில் தற்போது பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆறு ஆலைகளில் கடினமான கார்கள் உற்பத்திப் பிரிவில் சுமார் 3,000 பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதேபோல், எம்ஜி மோட்டார் நிறுவனத்தில் தற்போது 34% பேர் பெண் ஊழியர்களாக இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டிற்குள் 50% ஆக அதிகரிக்கவிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனத்தில் 1,500 பெண்கள் பணியாற்றி வரும் நிலையில், வருங்காலத்தில் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஒரு உற்பத்தி பிரிவு முழுவதுமே பெண்கள் மட்டுமே பணியாற்றுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
வாகனத்துறையில் பாலின சமநிலையை மேம்படுத்துவது நிச்சயமாக சிறந்த முடிவுகளை எடுக்கவும், புதுமையாக யோசனைகளை புகுத்தவும் வழிவகுக்கும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரவீந்திர குமார் கூறியுள்ளார்.