Skip to main content

கடத்தப்பட்ட காவல் கண்காணிப்பாளர்; துப்பாக்கியை கீழே வைத்து போலீஸ் போராட்டம்!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
Manipur Police lay down arms struggle against ASP's abduction, demand right to retaliate

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து மைத்தேயி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மணிப்பூர் அரசுக்கு கடந்தாண்டு மணிப்பூர் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது.

இதற்குப் பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கடந்த ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையைத் தொடர்ந்து பல நூறு பேர் கொல்லப்பட்டு, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீடுகள் சூறையாடப்பட்டு, பல மக்கள் வீடுகளற்ற அகதிகளாக மாறினர். ஓரளவுக்கு அங்கு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று கூறப்பட்டாலும், இன்னும் சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் தொடர்ந்தபடியே தான் இருக்கின்றன.

இதனையடுத்து, மைத்தேயி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற உத்தரவை கடந்த 22ஆம் தேதி மணிப்பூர் உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. அதாவது பழங்குடியினர் பட்டியலில் மைத்தேயி சமூகத்தினரை இணைக்க மாநில அரசுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த அறிவுறுத்தலை நீக்கம் செய்து உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தால் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களே மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. 

கலவரத்துக்கு காரணமாக அமைந்த தீர்ப்பை, நீதிமன்றம் திரும்பப் பெற்ற அடுத்த நாளிலே தனமஞ்சூரி எனும் பல்கலைக்கழக வளாகத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. அதில் ஒரு மாணவர் உயிரிழந்தார். இந்த நிலையில், மணிப்பூரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்பால் கிழக்கு பகுதியின் கூடுதல் காவல் கண்காணிப்பாளரான அமித் சிங் ஆரம்ப், தென்க்கோல் என்ற மைத்தேயி அமைப்பினைச் சேர்ந்தவர்களால்  கடத்தப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை (27.2.2024) வாங்கேயில் உள்ள அவரது வீட்டைத் தாக்கிய ஆயுதக் குழு அவரையும், அவரது பாதுகாப்பு காவலரையும் கடத்திச் சென்றனர். காவல் கண்காணிப்பாளர் கடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மணிப்பூர் மாநில காவல்துறையினர் துப்பாக்கியை கீழே வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மணிப்பூரில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மணிப்பூர் மாநில காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆயுதம் ஏந்திய கும்பலால் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கடத்தப்பட்ட சம்பவம் அறிந்ததும் சிறப்புப் படையினர் துரிதமாக செயல்பட்டு உடனடியாக அவரை மீட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல் அதிகாரி நலமுடன் இருக்கிறார். 200 பேர் கொண்ட ஆயுத கும்பல் இந்த தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்