Skip to main content

டிக்கெட் பரிசோதகர் கையைக் கடித்த பெண்; ஓடும் ரயிலில் பரபரப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Woman bites ticket inspector hand in moving train

ரயிலில் டிக்கெட் பரிசோதகரைக் கடித்த இளம்பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் இருந்து நேற்று முன் தினம் விரார் நோக்கி மின்சார ரயில் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அந்த ரயில் தகிசர் - மிரோரோடு இடையே சென்றுக்கொண்டிருந்தபோது, அதிரா(26)  என்ற பெண் டிக்கெட் பரிசோதகர் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில், ரயில் பெட்டியில் இருந்த சிங் என்ற பெண்ணிடம் டிக்கெட் பரிசோதனை செய்வதற்காக டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண், தனது கணவர் வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய டிக்கெட்டை காட்டியுள்ளார். ஆனால், இந்த டிக்கெட் செல்லாது என்று கூறிய பரிசோதகர் அதிரா, அடுத்து வரும் மிரா ரோடு ரயில் நிலையத்தில் இறங்குமாறு கூறியுள்ளார். இதனால்  இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பெண் பயணி மிராரோடு ரயில் நிலையம் வந்ததும், டிக்கெட் பரிசோதகர் அதிராவின் கையை கடித்துவிட்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அதிரா கத்தி கூச்சலிட அக்கம்பக்கத்தில் இருந்த மற்ற பயணிகள் பெண் பயணியை பிடித்து ரயில்வே போலீஸிடம் ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்ட பரிசோதகருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பெண் பயணிமீது வழக்குப்பதிவு செய்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

ரயில் பயணியிடம் கைவரிசை காட்டிய நபர்; போலீசார் அதிரடி நடவடிக்கை

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Police action on A person who shows his hand to a train passenger

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணியிடம் சங்கிலியைப் பறித்த நபரை, ரயில்வே போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

திருச்சியில் இருந்து நாகூர் செல்லும் விரைவு ரயில் ஏப்ரல் 26 ஆம் தேதி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 5 ஆவது நடைமேடையில் புறப்படத் தயாராக நின்றிருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகள் ரயிலில் அமர்ந்திருந்தனர். அப்போது ஜன்னலோரத்தில் நின்றிருந்த மர்ம நபர் ஒருவர், ரயிலில் அமர்ந்திருந்த நெல்லையைச் சேர்ந்த க. வெங்கடேஷ் என்ற பயணியின் கழுத்தில் கிடந்த 1 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடேஷ் போலீசாரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், திருச்சி ரயில்வே போலீஸ் ஆய்வாளர் மோகனசுந்தரி, உதவி ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், திருமலைராஜா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (28-04-24) காலை திருச்சி ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த நபர் கடலூர் மாவட்டம் அகரம், தங்காளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ர. கோவிந்தராஜ் (26) என்பதும், அவர்தான் வெங்கடேஷின் சங்கிலியை பறித்தது மற்றும் விருத்தாசலம் ரயில் நிலையத்திலும் இதேபோல ஒரு திருட்டு சம்பவத்தில் அவருக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து திருச்சி மாவட்ட 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Next Story

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் திடீர் மரணம்; கணவர் பரபரப்பு புகார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Family planning woman passed away suddenly

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (30). இவரது மனைவி துர்கா (27). கடந்த 2018ல் இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 2-வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி துர்காவை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அன்றைய தினம் மதியம் சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை துர்காவுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டது. மாலையில் அவருக்கு 106 டிகிரி அளவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்காக துர்காவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த துர்கா, சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்தன் காரணத்தால் தான் தன் மனைவி இறந்துவிட்டார். எனவே, உரிய முறையில் பிரேத பரிசோதனை செய்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் பன்னீர் செல்வம், புளியம்பட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.