இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தினசரி மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதியாகிவருகிறது. இடையில் சில நாட்களில், 4 லட்சம் பேருக்கும் கரோனா உறுதியானது. மேலும், இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டரை லட்சத்தைக் கடந்துள்ளது.
இந்தநிலையில், இந்தியாவில் இரண்டாவது அலை எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்விக்கு மூத்த வைராலஜிஸ்ட் ஷாகித் ஜமீல் பதிலளித்துள்ளார். அசோகா பல்கலைக்கழகத்தின் திரிவேதி உயிர் அறிவியல் பிரிவின் இயக்குநராகப் பணியாற்றி வரும் அவர், தனியார் ஊடகம் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவரிடம் இதுதொடர்பாக கேள்வியெழுப்பட்டது.
அதற்குப் பதிலளித்த ஷாகித் ஜமீல், "இந்தியாவில் கரோனா தொற்று பரவல் அதிகரிப்பதற்கு மரபணு மாற்றமடைந்த காரணம் கரோனா வைரஸ்கள்தான். ஆனால், இவை மிகவும் ஆபத்தானவை என்பதற்கு சான்று இல்லை. ஆனால், இது தொற்றை அதிகப்படுத்துவதுதான் வேதனையாக இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், "நாம் கரோனா அலையின் உச்சத்தை எட்டிவிட்டோமா என்பதை இப்போதே கூற முடியாது. கரோனா தொற்று குறைவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கின்றன. இருப்பினும் கரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக குறையாது. கரோனா பாதிப்பு, உச்சத்தை எட்டி குறைய தொடங்கினாலும், நீண்டகாலத்திற்கு அதிக அளவிலான கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பதிவாகும். கரோனா தொற்று பாதிப்பு குறைய ஜூலை முதல் ஆகஸ்ட்வரை ஆகலாம்" எனவும் கூறியுள்ளார்.