உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வெளியாகியுள்ள நிலையில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்று, ஆட்சியமைக்கவுள்ளது. இதனை, அக்கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள பா.ஜ.க.வின் தலைமை அலுவலகத்துக்கு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், "உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் கிடைத்த வெற்றி 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும். வரும் காலங்களில் பஞ்சாப் மாநிலத்தில் மாபெரும் சக்தியாக பா.ஜ.க. உருவெடுக்கும். பழைய பல்லவியைப் பாடாமல் அரசியல் வல்லுநர்கள் புதிய கண்ணோட்டத்துடன் சிந்திக்க வேண்டும். வளர்ச்சி மீது நம்பிக்கை வைத்து மீண்டும் பா.ஜ.க.வை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். சாதி அடிப்படையில் வாக்குச் சேகரிக்க முயன்ற கட்சிகளுக்கு மக்கள் பாடம் கற்பித்துவிட்டனர்.
மத்திய அரசின் முடிவுகளைக் குறைக்கூறுவதையே எதிர்க்கட்சிகள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவை எல்லாம்வற்றுக்கும் மக்கள் முடிவு கட்டுவார்கள். ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளையும் எதிர்க்கட்சிகள் குறைக்கூறுகின்றன. பா.ஜ.க.வினருக்கு ஹோலி பண்டிகை தொடங்கிவிட்டது. பா.ஜ.க. சிக்ஸர் அடித்து தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. தேர்தல் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி". இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.