Skip to main content

“தயவுசெய்து தேதியை சொல்லுங்கள்” - அமித்ஷாவின் சவாலை ஏற்ற சத்தீஸ்கர் முதல்வர்

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

Chhattisgarh CM takes up Amit Shah's challenge

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியை கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும் முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதே போல், மிசோரம் மாநிலத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

 

இதில், முன்னதாக சத்தீஸ்கர் மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில் பா.ஜ.க சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அந்த மாநிலத்தில் உள்ள பண்டாரியா தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான அரசு சட்டம் ஒழுங்கில் தோல்வியடைந்து விட்டது.

 

அவர் அளித்த 300க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் ஒன்று கூட இதுவரை நிறைவேற்றவில்லை. கடந்த 15 ஆண்டுகளில் முன்னாள் முதல்வர் ராமன் சிங் ஆட்சியில் சத்தீஸ்கர் மாநிலம் வளர்ச்சி மிகுந்த மாநிலமாக இருந்தது.  சத்தீஸ்கரின் முதல்வர் பூபேஷ் பாகேல் செய்த பணிகள் குறித்தும், 15 ஆண்டுகளில் பா.ஜ.க செய்த ஆட்சி குறித்தும் விவாதிக்க தயாரா? என்று பூபேஷ் பாகேல் அழைப்பு விடுத்து பேசியிருந்தார். 

 

இந்த நிலையில், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் அமித்ஷாவின் சவாலை ஏற்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியிருப்பதாவது, “பண்டாரியா தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அமித்ஷா விடுத்த சவால் ஏற்கப்பட்டது. ஆனால், தேதி மற்றும் நேரத்தை மட்டும் சொல்லாமல் விட்டுவீட்டீர்கள். ஆனால், விவாதத்துக்கான மேடையை பொதுமக்கள் தயார் செய்து விட்டனர். 5 ஆண்டுகளில் நாங்கள் செய்த பணிகள் குறித்தும், 15 ஆண்டுகளில் நீங்கள் செய்த பணிகள் குறித்தும் விவாதிக்க தயார். அதனால், தயவுசெய்து நேரம் மற்றும் தேதியை சொல்லுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்