அண்மையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” எனக் கூறியிருந்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க நிர்வாகிகள், இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், உத்தர பிரதேச சாமியார் ஒருவர், உதயநிதி ஸ்டாலின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி அளிக்கப்படும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அதே வேளையில், நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் அமைச்சர் உதயநிதி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு புறம் எதிர்ப்பு எழுந்தாலும், மற்றொரு புறம் உதயநிதி ஸ்டாலினுக்கு பலர் ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு , மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கண்டனம் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர், “நம் முன்னோர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து பாதுகாத்து வந்த சனாதன தர்மத்தை சிலர் முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர். சனாதனத்திற்கு எதிராக பேசும் எவரும் நாட்டில் அரசியல் அதிகாரத்தையும், மதிப்பையும் தக்கவைத்து கொள்ள முடியாது.
இனி அவர்களை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். சனாதன தர்மத்திற்கு எதிராக பேசினால் அவர்களின் நாக்கை பிடுங்குவோம். மேலும், சனாதனத்தை அலட்சியமாக பார்ப்பவர்களின் கண்களை நோண்டுவோம்” என்று கூறினார். அவரது பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.