இந்தியாவின் லாக்டவுன் தோல்வியடைந்த ஒன்று எனக் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காணொளிக்காட்சி மூலமாகச் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "தற்போதைய சூழலில் வைரஸ் அதிவேகமாக உயரும் ஒரே நாடு இந்தியா தான். ஆனால் நாம் இப்போது லாக்டவுனை தளர்த்தி வருகிறோம். ஊரடங்கின் நோக்கம் தோல்வியடைந்துவிட்டது. நாம் இப்போது பார்ப்பது ஊரடங்கு தோல்வியின் விளைவுகளே. வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, மத்திய அரசு என்ன செய்யத் திட்டமிட்டுள்ளது? மத்திய அரசு மாநில அரசுகளை ஆதரிக்க வேண்டும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய ஆதரவு இல்லாமல் செயல்படுவது கடினம்
அதேபோல மத்திய அரசு மக்களுக்கு நேரடியாகப் பணத்தைச் செலுத்த வேண்டும். அவர்கள் அதைச் செய்யாவிட்டால் ஆபத்தில்தான் முடியும். மாநில முதல்வர்கள், தங்கள் தனியாக இந்த போரில் ஈடுபடுவதாகக் கூறுகிறார்கள். அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள், என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்கிறார்கள், ஆனால் மத்திய அரசு என்ன செய்யத் திட்டமிட்டுள்ளது? மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம் பொருளாதார ஊக்கத்தொகை என்று பிரதமர் கூறினார், ஆனால் உண்மையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்திற்கும் குறைவானதுதான் அந்த தொகை. அதிலும் பெரும்பாலும் கடன்கள்தான் வழங்கப்பட உள்ளன. எந்தவொரு பணமும் மக்களுக்கு நேரடியாக வழங்கப்படப்போவதில்லை.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், நாங்கள் விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் நேரடியாகப் பணத்தை வழங்குகிறோம், ஆனால் மத்திய அரசிடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. மத்திய அரசின் போதிய ஆதரவு இல்லாமல் நமது மாநில அரசுகள் சிறப்பாகச் செயல்படுவது கடினமாகி வருகிறது. மேலும், பல சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் திவாலாகும் சூழலில் உள்ளன. இதனால் மக்கள் வேலையிழப்பார்கள். எனவே இப்படிப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கும், ஏழைகளுக்கும் பணம் செல்ல வேண்டியது அவசியம் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். அது செய்யப்படாவிட்டால் அது ஆபத்தானதாக முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.