Skip to main content

கடந்த ஆண்டு 8,700க்கும் மேற்பட்டோர் தண்டவாளங்களில் பலி -  இரயில்வே வாரியம் தகவல்!

Published on 04/06/2021 | Edited on 04/06/2021

 

migrant workers

 

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திர சேகர் கவுர். இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு ரயில்வே தண்டவாளங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து கேள்வியெழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்துள்ள ரயில்வே வாரியம், 8,700 பேருக்கும் மேற்பட்டவர்கள் ரயில்வே தண்டவாளங்களில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 

இதுதொடர்பாக ரயில்வே வாரியம், மாநில காவல்துறையிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஜனவரி 2020 முதல் டிசம்பர் 2020 வரை ரயில்வே தண்டவாளங்களில் 805 பேர் காயமடைந்துள்ளனர். 8,733 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறியுள்ளது. 2020ஆம் ஆண்டில் தண்டவாளங்களில் பலியானோரின் எண்ணிக்கை, அதற்கு முந்தைய நான்கு வருடங்களில் பலியானவர்களின் எண்ணிக்கையைவிட குறைவானதுதான் என்றாலும், கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து சில மாதங்களுக்குப் பயணிகள் இரயில் ஓடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 

 

இதற்கிடையே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியான இந்த தகவல் குறித்துப் பேசிய இரயில்வே அதிகாரிகள், 2020ஆம் ஆண்டு இரயில்வே தண்டவாளங்களில் இறந்தவர்களில் பெரும்பான்மையானோர், தண்டவாளம் வழியாக தங்கள் ஊருக்கு நடந்து செல்ல முயன்ற புலம்பெயர் தொழிலாளர்கள் என தெரிவித்துள்ளனர். தங்கள் ஊருக்குச் செல்லும் சாலை வழியைவிட, தண்டவாளப்பாதை தூரம் குறைந்தது என கருதிய புலம்பெயர் தொழிலாளர்கள், தண்டவாளத்தில் நடந்து தங்கள் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்ததாக அந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

மேலும் ஊரடங்கை மீறியதாக காவல்துறையிடம் சிக்குவதிலிருந்து தப்பிக்கவும், வழிமாறி செல்லாமல் இருக்கவும் புலம்பெயர் தொழிலாளர்கள் தண்டவாளத்தில் நடந்தது போக முடிவு செய்ததாகவும், ஊரடங்கு என்பதால் எந்த ரயில்களும் ஓடாது என அவர்கள் கருதினார்கள் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், சரக்கு இரயில்கள் உள்ளிட்டவை இயங்கின என்பதும், சரக்கு இரயில்கள் மோதி புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்த சம்பவங்கள் நடந்ததும் குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்