இந்தியா சுதந்திரம் அடைந்தது முதலே விவாதிக்கப்பட்டு வரும் சட்டம், பொது சிவில் சட்டமாகும். இந்த சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பும், ஒரு தரப்பினரின் ஆதரவும் நிலவி வருகிறது. இந்தியாவில் வசிக்கும் சிறுபான்மையினர், பொது சிவில் சட்டத்தை தங்களது உரிமைகளை பறிக்கும் ஒன்றாகவே கருதுகிறார்கள்.
நாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதி அளித்து வந்த பாஜக, இன்று பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. இதனையொட்டி பாஜக அரசு, பொது சிவில் சட்டத்தை கொண்டுவர முயற்சியெடுக்கும் என்றே கருதப்படுகிறது.
சமீபத்தில் ஒரு வழக்கில் பதிலளித்த மத்திய அரசு, ”இந்திய சட்ட ஆணையம், பொது சிவில் சட்டம் தொடர்பான பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து வருகிறது. அந்த ஆணையத்தின் அறிக்கைக்காக மத்திய அரசு காத்திருக்கிறது. சட்ட ஆணையத்தின் அறிக்கை கிடைத்ததும், அதுதொடர்பாக இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி இந்த விஷயத்தில் முடிவெடுக்கப்படும்" என தெரிவித்தது.
இந்தநிலையில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இதுதொடர்பாக, “உத்தரகாண்டில் விரைவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது மாநிலத்தில் உள்ள அனைவருக்குமான சம உரிமைகளை மேம்படுத்தும். சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும், பாலின நீதியை உயர்த்தும், பெண்கள் அதிகாரத்தை வலுப்படுத்தும் மற்றும் மாநிலத்தின் அசாதாரண கலாச்சார-ஆன்மீக அடையாளத்தையும் சூழலையும் பாதுகாக்க உதவும்" என அவர் தெரிவித்துள்ளார்.