ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன்பே பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரானோ பெருந்தொற்று காலத்தில், டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் ரூ.45 கோடி ரூபாய்யை செலவழித்து தனது வீட்டை சீரமைத்ததாக பா.ஜ.கவினர் குற்றச்சாட்டு வைத்தனர். பல பொது வளர்ச்சி திட்டங்கள் நிறுத்தப்பட்ட அந்த காலகட்டத்தில் சீரமைப்புக்கு பின்னால் உள்ள நிதி குறித்து பா.ஜ.க கேள்வி எழுப்பி குற்றச்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் தலைவரான கைலாஷ் கெலாட் தலைமையில் இன்று, டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன்பு நூற்றுக்கணக்கான பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். காவல்துறையால் அமைக்கப்பட்ட உலோகத் தடுப்புகளில் போராட்டக்காரர்கள் ஏறி போராட்டம் நடத்தி பெரும் சலசலப்பை உண்டாக்கினர். இதனையடுத்து, போராட்டம் நடத்திய பா.ஜ.க கட்சியின் டெல்லி பிரிவுத் தலைவர் வீரேந்திர சச்தேவா உள்ளிட்ட பா.ஜ.கவினரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையில், சமீபத்தில் பா.ஜ.கவில் இணைந்த கைலாஷ் கெலாட் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “ஷீஷ் மஹால்' விவகாரத்தில் நாங்கள் போராட்டம் நடத்தவே இங்கு வந்துள்ளோம். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நான் கடிதம் எழுதியபோது, ஷீஷ் மஹால் தொடர்பாக ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது, அது உண்மையிலேயே துரதிர்ஷ்டவசமானது என்று தெளிவாக எழுதினேன். ஆம் ஆத்மியின் அடிப்படைக் கொள்கைகளுடன் சமரசம் செய்து கொள்வதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இந்த முறை டெல்லியில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என்று நினைக்கிறேன். டெல்லியில் பணிகள் நடைபெறாததால் மக்கள் சிரமப்படுகின்றனர். சாக்கடைகள் நிரம்பி வழிகின்றன, குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை, சாலைகள் சேதமடைந்துள்ளன. டெல்லி மக்கள் இந்த முறை பா.ஜ.கவை வெற்றி பெறச் செய்வார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.