மேற்கு வங்கத்தில் வருகிற மார்ச் 27 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் தொடங்கி எட்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பே பரபரப்பாக இருந்து வந்த தேர்தல் களம், தேர்தல் தேதி அறிவிப்பிற்குப் பிறகு சூடு பிடித்துள்ளது. இந்த தேர்தலில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும், பாஜகவிற்கும் நேரடி போட்டி இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு கட்சிகளைத் தவிர, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இரண்டும் இணைந்து போட்டியிடுகின்றன.
இந்தநிலையில் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், சிவசேனா உள்ளிட்ட பாஜகவிற்கு எதிரணியில் செயல்பட்டு வரும் கட்சிகள், மேற்கு வங்க தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், மம்தா பானர்ஜிக்கு ஆதரவு அளிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். இது திரிணாமுல் கட்சிக்கு வலு சேர்க்கும் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.
அதேநேரம், திரிணாமுல் காங்கிரஸிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தவர்களால் மம்தாவிற்கு சிக்கல் ஏற்படும் என கருதப்பட்ட நிலையில், அது பாஜகவிற்கே சிக்கலாகியிருக்கிறது. பாஜகவில் முன்பு இருந்தவர்களுக்கும், தற்போது புதிதாக இணைந்துள்ளவர்களுக்கும் இடையே முக்கியத்துவம் யாருக்கு என்பதில் மோதல் ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 294 தொகுதிகள் உள்ள நிலையில், பாஜக சார்பாக போட்டியிட 8000 பேர் விண்ணப்பித்துள்ளனர். புதிதாக கட்சிக்குள் வந்தவர்களால் ஏற்பட்ட மொதல் குறித்து அம்மாநில பாஜக தலைவர், "பாஜக ஒரு பெரிய குடும்பம். குடும்பம் வளரும்போது, இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. பிற இயக்கங்களிலிருந்து மக்களை எடுத்துக்கொள்ளவில்லை என்றால் எவ்வாறு வளருவோம்?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
தேர்தல் நெருங்கும் சூழலில், உட்கட்சி பூசல் பாஜகவிற்குத் தலைவலியாக மாறியுள்ளதோடு, அக்கட்சிக்கு இது பின்னடைவாகவும் கருதப்படுகிறது.