மாநிலங்களவைத் தேர்தலில் குதிரைப் பேரம் எதிரொலியாக, ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கியுள்ள இடத்தில் இணையச் சேவை நிறுத்தப்படுகிறது.
மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களுக்கு நாடு முழுவதும் இன்று (10/06/2022) தேர்தல் நடைபெறுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தலுக்கு முன்னதாக, தங்களது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறி விடுவார்களா என்ற அச்சத்தால் உதய்ப்பூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். நேற்று (10/06/2022) இரவு அவர்கள் அங்கிருந்து ஜெய்ப்பூர் அமர் பகுதியில் இருக்கும் ஹோட்டலுக்கு மாற்றப்பட்டனர்.
இதையடுத்து, அங்கு காலை 09.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நிறுத்திவைக்க ஆளும் காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நான்கு இடங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக் மற்றும் பிரமோத் திவாரி ஆகிய மூன்று வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பா.ஜ.க. சார்பில் முன்னாள் அமைச்சர் போட்டியிடுகிறார். ஐந்தாவது வேட்பாளராக பா.ஜ.க. ஆதரவுடன் பிரபல ஊடக உரிமையாளர் சுபாஷ் சந்திரா களத்தில் உள்ளார். இதனால், குதிரை பேரம் நடக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் மூன்று பேர் வெற்றி பெற 123 வாக்குகள் தேவை என்ற நிலையில், 108 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். பா.ஜ.க.வுக்கு 71 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.